முக்கியமான பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு தற்போது நாடு முழுவதும் முதல் இடத்தை பிடித்திருப்பது மிகப் பெரிய சாதனை எனக் கூறலாம். 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19 சதவீத வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு அரசு பதிவு செய்துள்ளது. இந்த அளவிலான வளர்ச்சியை இந்தியாவின் எந்த மாநிலமும் எட்டவில்லை என்பதும் பெருமைக்குரியது. இந்த வெற்றியின் பின்னணியில் திராவிட மாடல் ஆட்சி முக்கிய பங்கு வகிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2024–2025ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசு 11.19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் கணிக்கப்பட்டதை விட இது 2.2 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் தமிழ்நாடு, நாடு முழுவதும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலமாக திகழ்கிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் வளர்ச்சி விகிதம் 9.69 சதவீதமாக இருந்தது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இந்த வளர்ச்சி நிலைமை தொடரும் பட்சத்தில், தமிழ்நாட்டின் மாநில உள்நாட்டு உற்பத்தி 17 லட்சம் கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு லட்சம் கோடி அதிகமாகும். தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது; தெலுங்கானா மற்றும் கர்நாடகா முதலிரண்டு இடங்களில் உள்ளன. ஒரு தமிழ்நாட்டவரின் சராசரி வருமானம் ரூ.3.61 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் முறையாக இரட்டை இலக்க வளர்ச்சி கடந்த 2010-11ஆம் நிதியாண்டில் kalaignar தலைமையில் பதிவாகியது. தற்போது அவரது வழியைத் தொடரும் திராவிட மாடல் மீண்டும் அதே உயரத்துக்கு தமிழ்நாட்டை அழைத்துச் சென்றிருக்கிறது. “2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” என்ற இலக்கு சாத்தியமாகும் என்பதை தற்போது தமிழ்நாடு நிரூபித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது – “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.”