சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 50வது முறையாக இன்று வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த பணமோசடி வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குநரகம் ஜூன் 14, 2023 அன்று கைது செய்தது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் ஓராண்டுக்கும் மேலாக ஜாமீன் இல்லாமல் புழல் சிறையில் உள்ளார். ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிசெந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, ஜூலை 22-ம் தேதி குற்றப் பதிவுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அன்றைய தினம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றதால் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது.
குற்றப்பத்திரிகையை ஒத்திவைக்கக் கோரியும், காணாமல் போன வங்கி கவரிங் லெட்டர் மற்றும் இதர ஆவணங்களை வழங்கக் கோரியும் செந்தில் பாலாஜி மீண்டும் 2 புதிய மனுக்களை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அல்லி முன்பு நேற்று நடந்தது. இரு மனுக்களுக்கும் அமலாக்கத் துறையின் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அதன்படி, இந்த புதிய மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை 50வது முறையாக இன்று வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.