மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், முக்கிய சந்திப்புகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக, மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, மும்பையில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வெளியே செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை பெருநகர மண்டலம் (MMR) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மும்பை நகரம், கிழக்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் முறையே 186.43, 208.78 மற்றும் 238.19 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பையின் தாதர், மாதுங்கா, பாரெல் மற்றும் சியோன் பகுதிகளில் ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. பல ரயில் நிலையங்களில் இருந்து ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.