ஸ்ரீசைலம்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆந்திராவின் கடலோர மாவட்டங்களிலும், பிரகாசம், நெல்லூர், கோதாவரி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சாகர், ஸ்ரீசைலம் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அணைகளில் இருந்து அதிகாரிகள் உபரி நீரை திறந்து விடுகின்றனர்.
ஸ்ரீசைலம் அணையின் கொள்ளளவு 885 அடி. தற்போதைய நீர்மட்டம் 882.7 அடியாக உள்ளதால் அதன் 3 மதகுகளும் திங்கள்கிழமை 10 அடி உயரத்துக்கு திறக்கப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று காலை மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டு மொத்தம் 5 மதகுகளில் 1.35 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் தாழ்வான பகுதி கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. கோதாவரி ஆற்றிலும் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தாளேஸ்வரம் அணையில் 13.7 அடி வரை தண்ணீர் நிரம்பியது. இதனால் தற்போது 12.95 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கனமழையால் கோதாவரி மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வாழை, பப்பாளி, பூ, காய்கறிகள், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன. கோனாசீமா மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.