புதுடெல்லி: மருந்து பொருட்களை நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரசாயன உரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மருந்துப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டு ஆணை 2013ன் அட்டவணை 1ல் பட்டியலிடப்பட்டுள்ள கலவைகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்கள் மற்றும் பட்டியலிடப்படாத கலவைகள் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் கண்காணிக்கப்படுகின்றன.
இவற்றின் விலைகளும் வருடத்திற்கு ஒருமுறை திருத்தம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எந்த மருந்து உற்பத்தியாளரும் முந்தைய ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சில்லறை விலையை விட 10 சதவீதத்திற்கு மேல் விலை நிர்ணயம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றார். இந்த விதிமுறையை மீறும் மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.