திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பாலக்காடு தொகுதியைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில், மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் எழுப்பிய பாலியல் புகாரை தொடர்ந்து இன்று (ஆக. 25) கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது கேரள அரசியலை கடுமையாக குலைக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் வாயிலாக ஆபாச தகவல்கள் அனுப்பியதோடு, தனிப்பட்ட சந்திப்புக்காக அழைத்ததாகவும், பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாகவும் நடிகை புகார் கூறினார். இவரது புகார் வெளியான பிறகு, ராகுல் மீது மேலும் சில பெண்களும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆரம்பத்தில் நடிகை ராகுலின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், பின்னர் ஊடகங்கள் அவர் தான் என உறுதிபடுத்தின.
அதிர்ச்சியூட்டும் இச்சம்பவங்களைத் தொடர்ந்து, ராகுல் தனது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், அவர் எம்எல்ஏ பதவியை விலகவில்லை என்பதனால், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அவர் எம்எல்ஏ பதவியையும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்த அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கேரள காங்கிரஸ் நிர்வாகம் அவசர ஆலோசனைக்குப் பிறகு, ராகுலை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது. இது தற்போது வரை எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது போராட்டங்களுக்கு முடிவுகாண்பிக்குமா அல்லது அரசியல் அழுத்தத்தை மேலும் தூண்டும் என்ற கேள்வி நிலவுகின்றது.