புதுடில்லி: அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், அதனால் பாதிப்பை சந்திக்கும் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க, பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அமெரிக்காவின் வரி உயர்வால் இந்திய ஜவுளி துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாக பருத்தி இறக்குமதிக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதல் விலக்கு வழங்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் ஜவுளித் துறையில் உள்ள உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பெரிதும் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்ற ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு முக்கிய பலன்களை அளிக்கும். மேலும், பருத்தி கிடைப்பை அதிகரித்து விலையை உறுதிப்படுத்தும். இது பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலம் ஊக்குவிப்பு கிடைக்கும். அதேசமயம், இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையையும் உலக சந்தையில் நிலைநிறுத்தும்.
மத்திய அரசின் இந்த தீர்மானம், ஜவுளித் துறையில் பெரும் நிவாரணத்தை வழங்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.