புதுடெல்லி: பந்தா அதிகாரி பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்வதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது. மேலும் அவர் ஆணையம் நடத்தும் எந்த ஒரு தேர்விலும் கலந்து கொள்ள நிரந்தரமாக தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர், போலி சான்றிதழ் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சலுகைகளைப் பெறுவதற்காக உடல் ஊனமுற்றவர்கள் எனக் கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்து முறைகேடாக ஓபிசி வகுப்புச் சான்றிதழ்களைப் பெற்றதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
யுபிஎஸ்சி விதிமுறைகளுக்கு மாறாக, பூஜா கேத்கர் தனது அடையாளத்தை மறைத்து அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி தேர்வு எழுதியதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அவரது பயிற்சி ரத்து செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு கடந்த 25ம் தேதி விளக்கம் அளித்த பூஜா கேத்கர், ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினார். இதை UPSC நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க பூஜா கேத்கர் தவறிவிட்டார். குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் இதுவரை சமர்ப்பித்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ததில் பூஜா கேத்கர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெளிவாகியுள்ளது. இதனால் அவரது ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது. எதிர்காலத்தில் UPSC நடத்தும் எந்தத் தேர்விலும் அவர் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.