புதுடெல்லி: டெல்லியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்ததால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. டெல்லிக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 27ம் தேதி கனமழை பெய்தது. ராஜேந்திர நகரில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ராவ் ஐஏஎஸ் பயிற்சி மைய கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்தது. இதில் இரண்டு இளம்பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை மீண்டும் மழை தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ந்ததால், பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக ஐஏஎஸ் பயிற்சி மைய கட்டிடம் சர்ச்சைக்குள்ளான பகுதிகளையும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. அதேபோல் பயிற்சி மைய மாணவர்கள் கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனமழை காரணமாக பல்வேறு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். டெல்லி பார்லிமென்ட் வளாகம் அமைந்துள்ள பகுதி, ஐடிஓ, ஜங்ஷன், கன்னாட் பிளேஸ், மோதி பாக் மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் டெல்லி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன; 10க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. டெல்லியின் பிரகதி மைதானத்தில் ஒரு மணி நேரத்தில் 11.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 5ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.