மும்பை: ‘குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களும் குற்றவாளிகள் தான், ஏனென்றால் அவர்கள் குற்றவாளிகளைப் போலவே பொதுவான நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்’ என்று பாம்பே உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு தனது காதலனுடன் இளம்பெண் ஒருவர் சென்றார். அப்போது, அங்கு வந்த நான்கு பேர், வனக்காவலர்கள் என கூறி, இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதில் இரண்டு பேர் அந்த பெண்ணை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்ற இருவரும் அவரது ஆண் நண்பரை கடுமையாக தாக்கினர்.
உண்மையான வனக் காவலர்கள் வந்த பிறகு, நால்வரும் தப்பிச் சென்றனர். இளம் பெண் அளித்த புகாரின் பேரில் நால்வர் மீதும் கூட்டு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பலாத்கார சம்பவத்தில் தொடர்பில்லாத இருவரும், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணை நாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. எங்கள் இருவரையும் குற்றவாளிகளாக கருத முடியாது’, என்றனர். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, நான்கு பேரின் தண்டனையை நீதிபதி உறுதி செய்தார்.
அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்நிலையில், கூட்டு பலாத்காரத்தை தடுக்க ஆண் நண்பர் தாக்கப்பட்டார். அவர் தாக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த குற்றத்தை தடுத்திருக்கலாம். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் பொதுவான நோக்கத்தில் செயல்பட்டனர் என்பதற்கு ஆண் நண்பர் மீதான தாக்குதல் சான்றாகும். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவருக்கு, மற்ற இருவரின் செயல் உடந்தையாக உள்ளது. எனவே, அவர்களும் குற்றவாளிகளே. நான்கு பேரின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்கிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.