திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ள நிலையில், வானிலை துறை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை ஓணம் கொண்டாடப்பட இருப்பதால், மாநிலம் முழுவதும் மக்கள் அதிக அளவில் ஷாப்பிங் செய்ய வருவதால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அடுத்த இரண்டு நாட்களில் திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்காக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஓணம் கொண்டாட்ட உற்சாகத்துடன், மழை எச்சரிக்கையும் மாநில மக்களுக்கு கவலைக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.