சென்னை: நியாய விலைக் கடைகளில் கடந்த ஜூலை மாதம் பருப்பு, பாமாயில் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம் என உணவு வழங்கல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது: தமிழக அரசு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு மாதம் ரூ.25க்கும் வழங்கப்படுகிறது. அதன்படி, ஜூன் மாதத்தில் பருப்பு, பாமாயில் பெற முடியாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூலை மாதம் பெற்றுக் கொள்ளலாம் என சட்டப் பேரவையில் உணவுத் துறை அமைச்சர் அறிவித்தார் ஜூலை மாதத்தில்.
ஆனால், சிறப்புப் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் ஜூலை மாதத்தில் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்படாததால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்துக்கான பருப்பு, பாமாயில் முழுமையாகப் பெற முடியவில்லை. எனவே, குடும்ப அட்டைதாரர்களின் பலனைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகளைப் பெற முடியாத அட்டைதாரர்கள் இந்த ஆகஸ்டில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.