மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை குறிவைத்து மனித வெடிகுண்டுகள் மற்றும் 400 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நகரம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதோடு, 21,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மிரட்டல் செய்தி மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கான ‘வாட்ஸ்அப்’ எண்ணுக்கு வந்திருந்தது. இதன் அடிப்படையில் பீகாரை சேர்ந்த 51 வயது அஸ்வினி குமார் என்ற நபர் நொய்டாவில் கைது செய்யப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நொய்டாவில் வசித்து வந்த அவர், ஜோதிடராக பணிபுரிந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரின் தொலைபேசி மற்றும் சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அஸ்வினி குமாரை மும்பைக்கு அழைத்து வந்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை மூலம் மிரட்டலின் உண்மைத் தன்மை மற்றும் அதற்கு பின்புலமாக உள்ளவர்கள் குறித்து தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை காவல்துறை, பொதுமக்கள் அச்சமின்றி பண்டிகையை கொண்டாடவும், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பெருமளவில் மக்கள் கூடும் நிலையில், இந்த மிரட்டல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.