நேபாளம்: நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பஸ் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குழுவினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தால் நேபாள தலைநகர் காத்மாண்டு கலவர பூமியாக மாறியது. இதனால் காத்மாண்டு நகரில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் காத்மாண்டுவுக்கு புனித யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பக்தர்கள் குழுவினர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா பஸ்சில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்து கடுமையாக தாக்கியது. அவர்கள் சரமாரியாக கற்களை வீசி பஸ் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இந்த தாக்குலில் பஸ்சில் இருந்த பக்தர்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.
பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகள், மொபைல்போன்கள், ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. இதையடுத்து சேதம் அடைந்த சுற்றுலா பஸ் உத்தரபிரதேச மாநில எல்லையான சோனாலிக்கு கொண்டு வரப்பட்டது. அதில் சென்ற பக்தர்கள் அனைவரும் மத்திய அரசு உதவியுடன் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.