பொதுவாக ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், அல்லது முன் இருந்த இதய பிரச்சனைகள் காரணம் என்று தெரியும். ஆனால் புதிய ஆய்வு ஒன்றில் வாயில் உள்ள பாக்டீரியாக்களும் இதய நோய்களில் பங்கு வகிக்கின்றன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
200க்கும் மேற்பட்ட நோயாளிகளின் தமனி பிளேக்குகள் பரிசோதிக்கப்பட்டதில், பாதிக்கும் மேற்பட்டவர்களின் பிளேக்குகளில் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், அவை அதெரோஸ்க்ளிரோசிஸ் (atherosclerosis – தமனியில் கொழுப்பு படிகட்டுதல்) மற்றும் கொரோனரி ஹார்ட் டிஸீஸ் உடன் தொடர்புடையவை என தெரியவந்துள்ளது.

இந்த பாக்டீரியாக்கள் ஆபத்தானது என்னவென்றால், அவை பிளேக்குகளுக்குள் ஆழமாக மறைந்து பயோஃபிலிம் வடிவில் வாழ்கின்றன. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு முறை அவற்றை அடையாளம் காண முடியாது. பல வருடங்கள் சத்தம் இல்லாமல் மறைந்து வாழும் இவை, மனஅழுத்தம் அல்லது தொற்று போன்ற காரணிகளால் தூண்டப்பட்டால் பிளேக் வெடித்து ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுக்கின்றன.
வாயில் உள்ள பாக்டீரியாக்களே ஹார்ட் அட்டாக் ஏற்படுத்துகின்றன என்று ஆய்வு கூறவில்லை. ஆனால் இது ஒரு மறைந்திருக்கும் அபாய காரணி என்பதை வெளிப்படுத்துகிறது. எனவே வாய்வழி ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியம் நேரடி தொடர்புடையவை என்பதை நாமும் உணர வேண்டும். நல்ல வாய்வழி சுகாதாரம் இல்லாமல் விட்டால், நீண்ட காலத்தில் இதயத்தையும் பாதிக்கக்கூடும்.