குவஹாத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் கட்சி என்னை குறிவைத்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறது. ஆனால் நான் சிவபெருமானின் பக்தன்; அவதூறு என்ற விஷத்தை விழுங்கி விடுவேன் என அவர் கூறினார். மக்கள் தான் என் கடவுள், என் குரு, என் இயக்கம் என்றும் வலியுறுத்தினார்.
பீஹாரில் நடந்த கூட்டத்தில், அவரது தாயார் குறித்து அவதூறான பேச்சும், செயற்கை நுண்ணறிவு வீடியோவும் வெளியிடப்பட்டதை அவர் கண்டித்தார். ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நம் ராணுவத்துக்கு பக்கபலமாக நிற்காமல், பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் அசாமில் வளர்ச்சி தடைப்பட்டதாகவும், பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் அரசால் அசாம் 13 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., அரசு ஆறு பாலங்களை கட்டி முடித்துள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் வெறும் மூன்றே பாலங்கள் கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அசாமில் ரூ.18,530 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், உலகின் முதல் மூங்கில் எத்தனால் ஆலையை நுமாலிகரில் திறந்து வைத்தார். இது 5,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு, 50,000 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் என தெரிவித்தார். இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது; இதில் அசாம் மாநிலத்தின் பங்கு முக்கியமானது என்றும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.