புதுடில்லி: இந்தியா உணவு உபரி நாடு… இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தியா உணவு உபரி நாடாகிவிட்டது எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- இந்தியாவின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் உள்ளது. யூனியன் பட்ஜெட் 2024-25 நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கக் கூடிய விவசாயத்திற்கு ஒரு பெரிய உந்துதலை அளித்துள்ளது.
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது. தற்போது இந்தியா உணவு தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டது. பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் உலகில் இந்தியா நம்பர் ஒன் நாடாக உள்ளது.
உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், காட்டன், சர்க்கரை, டீ உற்பத்தியில் மிகப்பெரிய 2-வது நாடாக உள்ளது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலக நாடுகளுக்கு கவலையளிக்கும் ஒரு காலம் இருந்தது. தற்போது இந்தியா உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பில் உலகளாவிய தீர்வு வழங்க பணியாற்றி கொண்டிருக்கிறது.
இந்திய விவசாயத்தில் 90 சதவீத விவசாயிகள் மிகவும் சிறிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரர்கள். இந்த சிறிய விவசாயிகள் இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பலம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.