வாஷிங்டன்: ஈரான் சாபகார் துறைமுகத்தில் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கான பொருளாதார தடை விலக்குகளை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் வர்த்தகத் திட்டங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

2018 ஆம் ஆண்டு, அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறியதற்காக அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தது. பின்னர், 2024 இல் இந்தியா–ஈரான் இடையே 10 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி, ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் ரூ.2,000 கோடிக்கு மேல் கட்டமைப்பு மேம்பாடுகளை இந்தியா மேற்கொண்டது. சாபகார் துறைமுகம், பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும் முக்கிய வர்த்தக வழித்தடமாக செயல்படுகிறது.
திட்டம் தொடங்கிய வேளையில் அமெரிக்கா, இந்தியாவுக்கு முழுமையான விலக்கு வழங்கியது. ஆனால், தற்போது டிரம்பின் “அதிகப்படியான அழுத்தக் கொள்கை”க்கு இணங்க, வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் இந்த விலக்குகளை ரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதனால், சாபகார் துறைமுகத்தில் செயல்படும் நிறுவனங்கள் ஈரான் சுதந்திரம் மற்றும் எதிர் பரவல் சட்டத்தின் கீழ் தடைகளுக்கு உட்படுத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, இந்தியாவின் வர்த்தக திட்டங்களையும், சர்வதேச வர்த்தகத் தொடர்புகளையும் பாதிக்கக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை, இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பில் புதிய சிக்கல்களை உருவாக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.