நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கு எதிராக அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் போராட்டம் நடத்தினர். “முகமது யூனுஸ் பாகிஸ்தானுக்கே திரும்பிச் செல்ல வேண்டும்” என்று கோஷமிட்டனர்.
கடந்தாண்டு மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியபின், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். “வங்கதேசத்தை பயங்கரவாத நாடாக மாற்றி வருகிறார். சிறுபான்மையினரின் நிலை மோசமடைந்துள்ளது. தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஐ.நா. பொது சபையில் உரையாற்றிய முகமது யூனுஸ், “சார்க் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். தெற்காசிய நாடுகளின் பிரச்சனைகளுக்கு சார்க் வழியாகவே தீர்வு கிடைக்கும்” என்று கூறினார். கடந்த பத்து ஆண்டுகளாக அரசியல் தடைகளால் சார்க் உச்சிமாநாடு நடைபெறவில்லை என அவர் கவலை தெரிவித்தார்.
வங்கதேசத்தின் அரசியல் சூழ்நிலையும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பின்மையும் குறித்து உலக சமூகம் கவலை வெளியிட்டு வரும் நிலையில், இந்த போராட்டம் அந்த பிரச்சனைக்கு மேலும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.