தஞ்சாவூர்: கேங்க் மேன் தொழிலாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். ஆறு சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தஞ்சாவூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மண்டல செயலாளர் ராஜேந்திரன் தலைமை அளித்தார். திட்ட தலைவர்கள் தஞ்சை அதிதூத மைக்கேல் ராஜ், நாகை கலைச்செல்வன், திருவாரூர் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி ஐ டி யு மாவட்ட செயலாளர் கண்ணன், மாநில செயலாளர் ஜெயபால், டி என் இ பி டபிள்யு ஓ மாநில செயலாளர் கோவிந்தராஜ் மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர்கள் காணிக்கை ராஜ், வெற்றிவேல், பொருளாளர்கள் மணிவண்ணன், குணசேகரன் முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காத்திருப்பு போராட்டத்தில் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும். ஆறு சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உள்முகத் தேர்வில் வாய்ப்பு வழங்க வேண்டும். சொந்த மாவட்டத்திற்கு விருப்ப ஊர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.