சென்னை: முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பிற துறை பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களுக்கான 1,996 காலிப் பணியிடங்களுக்கு இன்று (அக்.12) எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உடற்கல்வி உள்ளிட்ட 14 பாடங்களுக்கான தேர்வில் பங்கேற்பதற்காக ஜூலை 10-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. காலை 10.00 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.30 மணி வரை நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு காலை 10.00 மணி முதல் மதியம் 2 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு (Exam Centre) வந்தனர். காலை 9:30 பிறகு தேர்வு மையத்திற்குள் யாரும் அனுபவிக்கப்படவில்லை.
தேர்வர்கள் முன்னிலையில் விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு விடைத்தாள் பண்டல் மீது கையொப்பம் பெற்றனர். தேர்வறைக்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்ட்ரானிக் கைக் கடிகாரம், கால்குலேட்டர், கையேடுகள் போன்றவை அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெறுவதை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி தேர்வு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணித்தனர்.
இதில், சென்னையில் மட்டும் 55 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 20 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். 180 மதிப்பெண்களுக்கு 3 மணி 30 நிமிடம் தேர்வு நடைபெறுகிறது.