திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலின் துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்கம் மாயமான வழக்கில், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. கேரளாவின் மிகப்பெரிய மதநிலையமாக விளங்கும் சபரிமலை கோவிலில் 4 கிலோ தங்கம் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தங்கம் மாயம் தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் விசாரணை நடைபெற்றது. அவர் மீது சந்தேகம் அதிகரித்ததையடுத்து, கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டது.
இறுதி விசாரணை அறிக்கையில் உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், எஸ்பி பிஜோய் தலைமையிலான போலீசார் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிறகு, போத்தியை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தொடர்ந்து சாட்சிகள் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி நாளை மதியம் ரன்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சபரிமலை தங்கம் மாயம் வழக்கில் இது முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.