மேட்டூர்: கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 30ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 26,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 22,200 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மூலம் வினாடிக்கு 17,500 கனஅடி வீதம், 16 மதகுகள் மூலம் வினாடிக்கு 4,500 கனஅடி வீதம் மொத்தம் 22,000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 16 கண்மாய்கள் வழியாக, 4,500 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுவதால், சுற்றுவட்டார பகுதி மக்கள், மதகு பகுதியில் தூண்டில் வீசி மீன் பிடித்து வருகின்றனர்.
மேலும், 16 கண்மாய் அணைக்கட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்து, ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றனர். மேலும், சிலர் தண்ணீரில் குளித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 31 ஆயிரம் கன மீட்டராக குறைந்து நேற்று மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.