சென்னை: அகில் கட்டைகள் கடத்தி வந்த 2 பேரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது, இலங்கையை சேர்ந்த 2 பேர் சுற்றுலா பயணிகளாக சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால் பை, சூட்கேஸ்களை திறந்துகாட்டும்படி கூறினர். உயர்ரக வாசனை திரவியங்களின் நறுமணம் வீசியதால் பை மற்றும் சூட்கேஸ்களை திறந்து சோதித்தபோது 20 பார்சல்கள் இருந்தன.
பார்சல்களை பிரித்தபோது, சந்தனத்தைவிட அதிக நறுமணம் தரக்கூடிய 20 கிலோ அகில் கட்டைகள் இருந்தன. மற்றொரு பையில் மிகவும் விலை உயர்ந்த அகர் அத்தர் ஆயில் பாட்டில்கள் 15க்கும் மேற்பட்டவைகள் இருந்தது. மேலும் சர்வதேச வனத்துறை அனுமதி இல்லாமல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
அகில் கட்டைகள் மற்றும் அகர் அத்தர் ஆயில்களின் மதிப்பு இந்தியாவில் குறைவாக இருந்தாலும் சர்வதேச அளவில் பன்மடங்கு அதிகம். சர்வதேச அளவில் இந்த பொருட்களின் மதிப்பு ரூ. 40 லட்சம். இவர்களிடம் இருந்து நறுமண கட்டைகள் மற்றும் உயர்ரக வாசனை திரவியங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.