தஞ்சாவூா்: தஞ்சை சுங்காதிடல்- பைபாஸை இணைக்கும் வகையில் ரூ.6.50 கோடி மதிப்பில் மாநகராட்சி சார்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை பார்வையிட்டு தரமாக விரைந்து முடிக்க வேண்டும் என்று மேயர் சண் .ராமநாதன் அறிவுறுத்தினார்.
தஞ்சை மாநகராட்சி கோடியம்மன் கோவில் அருகே சுங்காதிடல் பகுதியில் சாலை குண்டு குழியுமாக இருந்தது . இந்த சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே குண்டும் குழியுமான சாலையை மாற்றி புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் .
இதனைத் தொடர்ந்து புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் , துணை முதலமைச்சர் , துறை அமைச்சர் ஆகியோர் புதிய தார்சாலை அமைக்க ரூ.6.50 கோடி மற்றும் சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க ரூ.18 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்தனர்.
இந்த நிலையில் சுங்காதிடல் சாலையை பைபாஸ் சாலையுடன் இணைத்து புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணியை இன்று காலை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நடந்து சென்று ஆய்வு நடத்தினார். தார் சாலையை தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் . குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு சாலையில் எந்த பிரச்சனையும் வராத அளவுக்கு தரமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுங்கா திடல் பகுதியில் புதிய தார்சாலை அமைக்க ரூ.6.50 கோடி நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சுங்காதிடல் பகுதியில் இருந்து போடப்படும் சாலை புறவழிச்சாலையை இணைக்கும். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இருபுறமும் தடுப்பு சுவர்கள் கட்டப்படும். மேலும் சாலையில் ரூ.18 லட்சம் மதிப்பில் 40 மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது. பணிகளை விரைந்து தரமாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.
வரும் பொங்கலுக்குள் பணிகள் அனைத்தும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பத்தாண்டுகளுக்கு சாலையில் எந்த பிரச்சினையும் இல்லாத அளவிற்கு தரமாக அமைக்கப்படும். இந்த சாலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சாலையாகும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் . புயல், மழை, வெள்ளம் கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவசர கால உதவிக்கு 1800 425 1100 என்ற டோல் பிரீ எண் அமலில் உள்ளது. இந்த நம்பரை தொடர்பு கொண்டு மக்கள் உதவி கோரலாம். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர்கள் செந்தமிழ் செல்வன், சுகந்தி துரைசிங்கம் , பகுதி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.