ஆப்கானிஸ்தான்: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ஆப்கானிஸ்தான் நாட்டில், 5.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து 130 கி.மீ. தொலைவிலுள்ள நங்கார்ஹர் மாகாணத்தில் இன்று பிப். 20 மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், காபுல் நகரத்துக்கு மேற்கில் அமைந்துள்ள பாமியான் மற்றும் வர்தாக் ஆகிய மாகாணங்களிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாக, உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்தப் புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
யுரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளுக்கு இடையில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைத்தொடர்கள் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமுள்ள பகுதி எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2025 ஆகஸ்டில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து, சுமார் 2,200-க்கும் அதிகமான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.