புதுடில்லி: பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 92 வயதான ஆஷா போஸ்லேவுக்கு நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பன்முகக் குரல்களில் ஒருவரான ஆஷா போஸ்லே அவர்களின் மறைவால் நான் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். பல தசாப்தங்களாக நீடித்த அவரது தனித்துவமான இசைப் பயணம், நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களின் இதயங்களைத் தொட்டது.
மனதை வருடும் மெல்லிசைகள் முதல் எழுச்சியூட்டும் இசையமைப்புகள் வரை, அவரது குரல் காலத்தால் அழியாத ஒரு பிரகாசத்தைக் கொண்டிருந்தது. அவருடனான எனது உரையாடல்களின் நினைவுகளை நான் என்றென்றும் போற்றிப் பாதுகாப்பேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பார். மேலும் அவரது பாடல்கள் மக்களின் வாழ்வில் என்றென்றும் எதிரொலிக்கும்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.