சென்னை: ஓட்டேரி கால்வாய் புதிய பாலம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள ஆஸ்பிரான் தோட்டம் 2-வது தெருவையும், கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலையையும் இணைக்கும் வகையில், ஓட்டேரி நல்லா கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலத்தை கட்ட, தனியார் நிறுவனத்துக்கு மாநகராட்சி ஒப்பந்த பணி வழங்கியது.
இதில் திட்ட மதிப்பீடுகளை அதிகரித்து காட்டி, அரசு பணத்தை முறைகேடு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் தனியார் நிறுவனத்துக்கு உடந்தையாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.