இலங்கை: இலங்கையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த 3 சீனர்களை கைது செய்த விமான நிலைய அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை இலங்கையின் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற மூன்று சீன நாட்டவர்கள் இன்று (மே 25 ஆம் தேதி) அதிகாலை சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களிடம் இருந்து சுமார் ரூ.60.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீன நாட்டவர்கள் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. சர்வதேச விமான நிலையங்களில் நடைபெறும் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மூவரையும் அதிகாரிகள் கண்காணித்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில், சீனாவில் இருந்து நேரடியாக இலங்கைக்கு வந்தால் சுங்கத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்கக் கூடும் என்பதால், கடத்தல்காரர்கள் திட்டமிட்டு முதலில் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு பயணம் செய்து உள்ளனர். பின்னர் அங்கிருந்து ‘பாடிக் ஏர்’ நிறுவனத்திற்குச் சொந்தமான OD-297 என்ற விமானம் மூலம் இன்று (மே 25 ஆம் தேதி) அதிகாலை 1.05 மணியளவில் இலங்கையின் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்து உள்ளனர்.
விமான நிலையத்தில் இறங்கிய பின்னர் அவர்கள் கொண்டு வந்த ஆறு பயணப் பெட்டிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அந்தப் பெட்டிகளுக்குள் மிகவும் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,400 சிகரெட்டுகள் அடங்கிய 202 சிகரெட் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், மூவரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.