வங்கதேசம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்று தோற்றமளிக்கும் எருமை மாடு ஒன்று வங்கதேசத்தில் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் அது உயிர் தப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடுவதற்காக வளர்க்கப்பட்ட இந்த எருமை மாடு சுமார் 700 கிலோ எடை கொண்டதாகும். இதன் நெற்றியில் வெள்ளை நிறத் திட்டு இருந்ததுடன், தலையின் மேற்பகுதியில் டிரம்பின் சிகை அலங்காரத்தை ஒத்த மஞ்சள் கலந்த வெள்ளை நிற முடி காணப்பட்டது.
இதனால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள், இந்த எருமைக்கு ‘டொனால்ட் டிரம்ப் எருமை’ என்று பெயரிட்டனர். இந்த எருமையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வைரலானது.
இந்த எருமைக்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, அதை பலியிடக் கூடாது என்று வங்கதேச அரசு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, அந்த எருமையின் உரிமையாளரான ஜியா உத்தீன் மிருதாவிடமிருந்து அரசே விலைக்கு வாங்கி, டாக்காவில் உள்ள வங்காளதேச தேசிய மிருகக்காட்சிசாலைக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றது.
மேலும், அதே பண்ணையில் இருந்த மற்றொரு 750 கிலோ எடை கொண்ட எருமைக்கு ‘பெஞ்சமின் நேதன்யாகு’ என்று பெயரிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.