புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (ஆக.12) கேள்வி நேரத்தின்போது பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எந்த மருத்துவமனையும் ஏற்கவில்லை.
மத்திய அரசு ஜிப்மர் மருத்துவமனையில் கூட ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் ஏழை மக்கள் அவசர சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று கேட்டார் .
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுச்சேரிக்கு ஓரளவு மட்டுமே பயன் கிடைத்துள்ளது. இது முழுமையான திட்டம் அல்ல. சில மாநிலங்களில் தனி காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம். அதன்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” என்றார். என்று கூறினார்.