புதுடில்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் பதற்றமான சூழலிலும் இந்திய கொடி ஏந்திய ‘திஷா’ கப்பல் பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் காரணமாக உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய கொடி ஏந்திய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிச் சென்ற ‘திஷா’ வணிகக் கப்பல் பாதுகாப்பாக ஜலசந்தியை கடந்துள்ளது.
62,370 டன் எல்.என்.ஜி. எரிவாயுவுடன் பயணிக்கும் இந்தக் கப்பல், குஜராத் மாநிலத்தின் தஹேஜ் துறைமுகத்தை விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வெற்றிகரமான பயணம், ஹார்முஸ் வழியாக செல்ல காத்திருக்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு கொடியுடன் கூடிய 34 வணிகக் கப்பல்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஜலசந்தியில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களில் உரம் மற்றும் தொழில்துறை மூலப்பொருட்கள் ஏற்றிச் செல்லும் பல கப்பல்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.