ஸ்காட்லாந்த்: ஸ்காட்லாந்தின் ஆரன் தீவில் கருங்குருவிகள் மர்மமாக உயிரிழந்து வரும் நிலையில், அதற்கு ‘உசுட்டு வைரஸ்’ காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் எதிர்காலத்தில் பெரிய சுகாதார சவாலாக மாறலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள ஆரன் தீவில் சமீப காலமாக கருங்குருவிகள் விசித்திரமான அறிகுறிகளுடன் இறந்து கிடப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ‘உசுட்டு வைரஸ்’ தாக்குதலே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்பது தெரியவந்தது. 1959-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது.
இந்த வைரஸை பழுப்பு-சாம்பல் நிற ‘கியூலெக்ஸ் பிபியன்ஸ்’ வகை கொசுக்கள் பரப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நோய்த்தொற்றுள்ள கொசு மனிதர்களையோ விலங்குகளையோ கடிக்கும் போது வைரஸ் பரவுகிறது.
ஸ்காட்லாந்தின் தொற்றுநோய் நிபுணர் ஹீதர் பெர்குசன் கூறுகையில், “இந்த வைரஸ் தற்போது மனிதர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இல்லை. ஆனால் பறவைகளின் உயிரிழப்புகள் அதிகரிப்பது கவலைக்குரியது. இது எதிர்காலத்தில் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினைக்கான எச்சரிக்கை மணி” என்றார்.
முன்னதாக ஐரோப்பா முழுவதும் கருங்குருவிகளின் எண்ணிக்கையை இந்த வைரஸ் கணிசமாக குறைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆந்தைகள், வேட்டைப் பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்களையும் இது பாதித்து வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.