கேரளா மாம்பழ புளிசேரி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 பழுத்த சிறிய மாம்பழம்
*1 கப் தயிர்
*1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
*1/4 ஸ்பூன் மிளகாய் தூள்
*1 டேபிள் ஸ்பூன் வெல்லம்
*1 கொத்து கறிவேப்பிலை
*தேவையான அளவு உப்பு
அரைக்க:
*1 கப் தேங்காய்
*2 பச்சை மிளகாய்
*½ ஸ்பூன் சீரகம்
தாளிக்க:
*1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
*1 வர மிளகாய்
*1/2 ஸ்பூன் கடுகு
*கால் ஸ்பூன் வெந்தயம்
*1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
*சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை: முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் சிறிது தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். இதை மென்மையான விழுதாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் மாம்பழங்களை எடுத்து மெதுவாகத் தோலுரித்துக் கொள்ளவும். கீழிருந்து மேலாக பழத்தை உரித்தால் எளிதாக தோல் வரும். முடிந்தவரை பழத்தின் வடிவம் சிதையாமல் தோலை உரிக்கவும். ஒரு பாத்திரத்தில் தோல் நீக்கிய மாம்பழங்கள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெல்லம் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
இதை 5 நிமிடங்கள் அல்லது மாம்பழம் மென்மையாகும் வரை கொதிக்க வைக்கவும். மாம்பழங்கள் கருகாமல் இருக்க, அவற்றை அவ்வப்போது மெதுவாகத் திருப்பிவிடுவதை உறுதி செய்யவும். பின்னர் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
பின்னர் குழம்பு கெட்டியாகி ஒரே சீராக வரும் வரை கொதிக்க விடவும். தயிரை நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து. அடித்து வைத்த தயிரைச் சேர்க்கவும். தயிர் சேர்த்தப் பிறகு கொதிக்கும் வரை மட்டும் சூடாக்கவும். ஆனால், கொதித்து விடாமல் சரியான நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அதில் வர மிளகாய், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, கடைசியாக மிளகாய்த் தூளைச் சேர்த்து ஒருமுறை வேகமாக கிளறவும். இதை மாம்பழ புளிசேரியில் சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான கேரளா மாம்பழ புளிசேரி தயார்!