டார்வின்: ஆஸ்திரேலியா–வங்கதேசம் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணியில் காயத்திலிருந்து மீண்ட கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க் ஆகிய ‘பிக் ஃபோர்’ வீரர்கள் ஒன்றாக களமிறங்க உள்ளனர். ஸ்காட் போலந்தும் பந்துவீச்சில் வலு சேர்க்கிறார். ஆல்ரவுண்டர்களாக கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர் இடம்பெற்றுள்ளனர்.
பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்ட் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் நடுவரிசையில் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
மறுபுறம் வங்கதேச அணி பயிற்சி ஆட்டத்தில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் நஹித் ராணா, முஸ்டாபிஸுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் காயம் காரணமாக இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அனுபவ வீரர் முஸ்பிகுர் ரஹிமும் காயம் காரணமாக தொடரில் இடம்பெறவில்லை.
அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை தொடர்ந்து ஆஷஸ் தொடரிலும் ஆஸ்திரேலியா பங்கேற்க உள்ளது.
