சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்த பிரபல இயக்குநர் ஒருவர், தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்து வரும் மாவட்டச் செயலாளரை புறக்கணித்து வெளியில் இருந்து வருபவருக்கு தொகுதி வழங்க முடியாது என விஜய் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விஜய்யுடன் ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் அந்த நபர் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. குறிப்பாக கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தொடர்பான குறிப்பும், லோகேஷ் கனகராஜின் சொந்த ஊர் கிணத்துக்கடவு என்பதும் இந்த யூகத்துக்கு காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்ட நபர் நான் இல்லை. வேறு யாராவது இருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு லோகேஷ் கனகராஜ் நேரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
