மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், 54 வயதில் தனது நீண்டகால காதலியான மாடல் அழகி கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
‘துரந்தர்’, ‘பகவந்த் கேசரி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அர்ஜுன் ராம்பால், கேப்ரியெல்லாவை கடந்த 2018-ம் ஆண்டு பொதுவான நண்பர்கள் மூலம் சந்தித்தார். பின்னர் இருவரும் காதலித்து வந்தனர்.
இதற்கிடையே, அர்ஜுன் ராம்பால் தனது முதல் மனைவி மெஹ்ர் ஜெசியாவை விவாகரத்து செய்தார். இவர்களது விவாகரத்து 2019-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக முடிவடைந்தது.
அர்ஜுன் ராம்பால்–கேப்ரியெல்லா தம்பதியினர் திருமணம் செய்து கொள்ளாமல் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2019-ம் ஆண்டு அரிக் மற்றும் 2023-ம் ஆண்டு அரிவ் என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதல் திருமணம் மூலம் அர்ஜுன் ராம்பாலுக்கு மஹிகா, மைரா என இரு மகள்களும் உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் நடிகை ரியா சக்ரவர்த்தியின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இருவரும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அர்ஜுன் ராம்பால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வடக்கு கோவா பார்தேஸ் துணைப் பதிவாளர் சூரஜ் வெர்னேகர் இவர்களது திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் பதிவுத் திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
