இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தொடர்பான 3,897 பதிவுகள் டார்க் வெப்பில் காணப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 21-ஆம் தேதி வெளியான தகவலின்படி, டார்க் வெப்பில் காணப்பட்ட சுமார் 3.75 லட்சம் பதிவுகளை முதற்கட்டமாக ஆய்வு செய்தபோது, 3,897 பதிவுகளில் தனிநபர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தத் தகவல்களில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பாலினம், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்கள், பிறந்த தேதிகள், மின்னஞ்சல் முகவரிகள், வீட்டு முகவரிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கிளை மற்றும் வாடிக்கையாளர் அடையாள எண்கள், கடன் தொடர்பான சில விவரங்களும் பதிவுகளில் இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல்கள் எவ்வாறு வெளியானது, அவற்றின் முழுமையான நம்பகத்தன்மை என்ன, எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டறிய விரிவான ஆய்வு தேவைப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருப்பது மோசடி அழைப்புகள், போலியான வங்கிச் செய்திகள், அடையாளத்தைப் பயன்படுத்தி நடைபெறும் இணையக் குற்றங்கள் போன்றவற்றுக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, வாடிக்கையாளர்கள் வங்கியின் பெயரில் வரும் சந்தேகத்துக்குரிய இணைப்புகளைத் திறப்பதைத் தவிர்க்க வேண்டும். ஓடிபி, கடவுச்சொல், ஏடிஎம் ரகசிய எண் உள்ளிட்டவற்றை யாரிடமும் பகிரக்கூடாது.
