சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. நந்தனம் டிரேட் சென்டரில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்த அந்த படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
நட்சத்திர பட்டாளம்
‘சர்தார் 2’ படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
குறிப்பாக, சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதும் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வைரலான அறிமுக வீடியோ
சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
‘மயில்வீரா’ பாடலுக்கு வரவேற்பு
‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.
‘மயில்வீரா’ பாடலை ஆஃப்ரோ, வாஹீசன் ராசையா மற்றும் முகேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளையும் ஆஃப்ரோ மற்றும் வாஹீசன் ராசையா இணைந்து எழுதியுள்ளனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்கு முன்னதாக இன்று நடைபெறும் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
