காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட அதிக அளவில் பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் நாடுகள் தார்மீக பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து கோஷி, திரிசூலி உள்ளிட்ட ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேரழிவை வெறும் மனிதாபிமான அவசரநிலையாக மட்டும் பார்க்க முடியாது என்றும், தொழில்மயமான நாடுகளின் அதிகப்படியான பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தால் ஏற்படும் காலநிலை மாற்றத்துடன் இதை தொடர்புபடுத்த வேண்டும் என்றும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் கனால் தெரிவித்துள்ளார்.
சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை அதிக அளவில் பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் நாடுகள் என்பதால், இமயமலைப் பகுதிகளில் ஏற்படும் காலநிலை பாதிப்புகளுக்கு அவை பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இமயமலை பனிப்பாறைகள் தொடர்ந்து உருகினால் கங்கை, திரிசூலி உள்ளிட்ட ஆறுகளை நம்பியுள்ள தெற்காசிய மக்களின் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் நேபாள அரசு எச்சரித்துள்ளது.
