காத்மாண்டு: நேபாளத்தின் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டாற்று வெள்ளம், பல மாவட்டங்களை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. நீருடன் பாறைகள், மண், சேறு ஆகியவை பெருக்கெடுத்து வந்ததால் பாலங்கள், சாலைகள், நீர்மின் நிலையங்கள், வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
போடேகோஷி ஆற்றின் கிளை நதியான லெண்டே பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் நீரோட்டம் தடுக்கப்பட்டு உருவான ஏரி உடைந்ததன் காரணமாக இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளம் மட்டுமின்றி இமயமலையில் இருந்து பாறைகள், மண் மற்றும் சேறு பெருமளவில் அடித்து வரப்பட்டதால், ரசுவா, நுவாகோட், தாடிங் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன.
பேரிடர் ஏற்பட்டு நான்காவது நாளாகியும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐ நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே போடேகோஷி ஆற்றில் மீண்டும் நீர்மட்டமும் சேறு ஓட்டமும் அதிகரித்துள்ளதால், மற்றொரு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
