கேரளா: சபரிமலை தரிசனத்துக்கு சென்ற திருநங்கை வழக்கறிஞரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய விவகாரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது.
செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்யஸ்ரீ சர்மிளா, ஆவணி மாத பூஜையை முன்னிட்டு 41 நாட்கள் விரதம் இருந்து கடந்த 20-ம் தேதி சபரிமலைக்கு சென்றுள்ளார்.
பம்பை பகுதியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தரிசனத்துக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
தனது மனுவில், ஏற்கனவே ஜனவரி 3-ம் தேதி மற்றும் ஏப்ரல் 15-ம் தேதி இருமுடி கட்டி சபரிமலை சென்று தரிசனம் செய்துள்ளதாகவும், தற்போது திருநங்கை என்பதைக் காரணமாகக் கூறி போலீசார் அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சபரிமலை தரிசனத்துக்கு தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக கேரள அரசுக்கும் சம்பந்தப்பட்ட துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
