சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காக, ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு காத்மாண்டு செல்ல உள்ளது.
தமிழர்களை மீட்பது தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, தலைமைச் செயலாளர் சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், பொதுத்துறை செயலாளர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தொடர்பு கொள்ள முடியாதவர்களின் நிலையை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் ஆகியோர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
