எடின்பரோ: உலகிலேயே உயர்ந்த ராணுவப் பதவியை பெற்ற பென்குயின் என்ற கின்னஸ் சாதனை படைத்த ‘சர் நில்ஸ் ஒலாவ் III’ விரைவில் தந்தையாக உள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பரோ உயிரியல் பூங்காவில் அதன் இணையான பெண் பென்குயின் ‘கானி’ முட்டையிட்டுள்ளது.
எடின்பரோ உயிரியல் பூங்காவில் கடந்த 17 ஆண்டுகளில் கிங் பென்குயின் இனத்தைச் சேர்ந்த பெண் பென்குயின் முட்டையிடுவது இதுவே முதல் முறை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி அதிகாலை கானி முட்டையிட்டது.
கடந்த ஜனவரி மாதம் கானி உள்ளிட்ட 3 பெண் பென்குயின்கள் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. அவை புதிய சூழலுக்கு பழகி இனப்பெருக்கம் செய்ய 2027-ம் ஆண்டு வரை ஆகலாம் என பராமரிப்பாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராத வகையில் விரைவிலேயே முட்டையிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த சர் நில்ஸ் ஒலாவ்?
சர் நில்ஸ் ஒலாவ் சாதாரண பென்குயின் அல்ல. நார்வே நாட்டின் அரச பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ சின்னமாகவும், அதன் கௌரவ தளபதியாகவும் இது விளங்குகிறது.
1972-ம் ஆண்டு முதல் ‘நில்ஸ் ஒலாவ்’ என்ற பெயர் கிங் பென்குயின்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு பிரிகேடியர் அந்தஸ்தை பெற்ற இந்த பென்குயின், 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி நார்வே ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டது.
இதன் மூலம் உலகிலேயே மிக உயர்ந்த ராணுவப் பதவியில் இருக்கும் பென்குயின் என்ற கின்னஸ் சாதனையையும் பெற்றுள்ளது.
கிங் பென்குயின்கள் பொதுவாக ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும். அந்த முட்டை குஞ்சாக உருவாக சுமார் 55 நாட்கள் ஆகும். அவை கூடுகள் கட்டுவதில்லை. மாறாக, பெற்றோர் இருவரும் முட்டையை கால்களின் மேல் வைத்து, மாறி மாறி உடல் வெப்பத்தால் பாதுகாக்கின்றன.
தற்போது கானியும் சர் நில்ஸ் ஒலாவும் முட்டையை பாதுகாத்து வருகின்றனர். ராணுவ கௌரவங்களை பெற்ற சர் நில்ஸ் ஒலாவ், தனது வாழ்வின் புதிய பொறுப்பான ‘தந்தை’ பதவியை ஏற்க தயாராகி வருகிறது.
