மதுரா: ஒடிசாவில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு இயற்கை உர மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தப்பட்ட 251 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசாவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் அலிகருக்கு இயற்கை உரம் என்ற போர்வையில் கஞ்சா கடத்தப்படுவதாக ஆக்ரா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆக்ரா போதைப்பொருள் தடுப்புப் படையினரும், போலீஸாரும் இணைந்து ஆக்ரா-டெல்லி நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உர மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்து சோதனை செய்தனர்.
லாரியில் இருந்த இயற்கை உர மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 251 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவையும் லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
லாரி ஓட்டுநரான ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி, கிளீனர் வித்யுத் மற்றும் லாரிக்கு முன்னால் காரில் கண்காணித்தபடி சென்ற அலிகரைச் சேர்ந்த ஹரிவிந்தர், அபிஜித், லலித் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், மதுரா மற்றும் அலிகர் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளியான முகுல், போலீஸாரை பார்த்ததும் பைக்கில் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
