லக்னோ: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள அவர், அங்குள்ள கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது இந்திய ஜனநாயக அமைப்பு, தேர்தல் நடைமுறைகள், இ.வி.எம்.களின் தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்கு குறித்து அவர் விளக்கினார்.
இ.வி.எம்.களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஞானேஷ் குமார், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த இயந்திரங்களில் இணையதளம், ப்ளூடூத், வைஃபை உள்ளிட்ட வயர்லெஸ் தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை என்பதால், வெளியில் இருந்து அவற்றை ஹேக் செய்யவோ கட்டுப்படுத்தவோ முடியாது என அவர் கூறினார்.
சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வேகமாக பரவும் நிலையில், இளைஞர்கள் எந்தவொரு தகவலையும் உடனடியாக நம்பாமல், அதன் உண்மைத்தன்மையையும் ஆதாரத்தையும் சரிபார்த்த பின்னரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்தியாவில் சுமார் 100 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இவ்வளவு பெரிய அளவிலான தேர்தலை நடத்துவது மிகப்பெரிய சவால் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 326-வது பிரிவின்படி 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இளைஞர்கள் தாங்கள் வாக்களிப்பதுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இளைஞர்கள் திகழ்வதாகவும் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
