அமெரிக்கா: அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது 19 வயது மகள் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த சுரேஷ் படேல், 56, டென்னசி மாகாணத்தின் ஜாக்சன் நகரில் மதுபானக் கடை நடத்தி வந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு அவர் தனது 19 வயது மகளுடன் கடையில் இருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் கடைக்குள் நுழைந்துள்ளார்.
துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த நபர் பணத்தை கேட்டுள்ளார். பணத்தைப் பெற்ற பின்னர் அவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் சுரேஷ் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் இருந்த அவரது 19 வயது மகள் காயமின்றி உயிர் தப்பினார். கடையில் பணியாற்றிய 70 வயது ஊழியர் ஒருவர் கீழே விழுந்ததில் கை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது.
சுரேஷ் படேல் சமீபத்தில்தான் அந்தக் கடையை வாங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் சாம்பல் நிற ஹூடி மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்ததும், வெள்ளை நிற காரில் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஜாக்சன் போலீசார், சந்தேக நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவில் இந்தியர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் தொடர்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
