ஆப்பிரிக்கா: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.
நானா-மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. முதற்கட்ட தகவலின்படி 30 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.
மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினரும் உள்ளூர் மக்களும் பல மணி நேரம் போராடியதாக மாகாண துணை மேயர் சுலைமான் தெரிவித்துள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா தெரிவித்துள்ளார்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் சிறிய அளவிலான கனிம அகழ்வு சுரங்கப் பணிகளில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் இதுபோன்ற சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
