அமெரிக்கா: நிலவின் மேற்பரப்பில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மோதியதில் ஏற்பட்ட பள்ளத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக 2025 ஜனவரியில் ஏவப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட், ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் 1 நிலவு லேண்டரை சுமந்து சென்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5-ம் தேதி அந்த ராக்கெட் எதிர்பாராத விதமாக நிலவின் மேற்பரப்பில் மோதியது.
இதன் தாக்கத்தை ஆய்வு செய்ய ஆகஸ்ட் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நாசாவின் லூனார் ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர் நிலவின் அந்தப் பகுதியை புகைப்படம் எடுத்தது. புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், நிலவின் மேற்பரப்பில் சுமார் 60 அடி, அதாவது 18 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதற்கு முன்பாக கொரியாவின் டானூரி நிலவு ஆர்பிட்டரும் இந்த தாக்கம் ஏற்பட்ட பகுதியை புகைப்படம் எடுத்திருந்தது. குறிப்பிட்ட இடத்தை துல்லியமாக படம் பிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ராக்கெட் மோதிய இடத்தை கண்டறிய நாசாவின் புவிக்கு அருகிலுள்ள விண்வெளிப் பொருட்கள் ஆய்வு மையம், ராக்கெட்டின் பயணப்பாதையை படிப்படியாக ஆய்வு செய்து துல்லியப்படுத்தியது.பின்னர் இந்த தகவல்கள் கொரிய விண்வெளி நிறுவனத்துடன் பகிரப்பட்டு, டானூரி குழுவினரின் தொடர் புகைப்படப் பணிகளுக்கும் உதவியதாக நாசா தெரிவித்துள்ளது.
