சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிப்புகளுடன் மருத்துவப் படிப்புகளையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல் துறையில் சிறந்து விளங்கும் சென்னை ஐ.ஐ.டி., கடந்த 2023-ம் ஆண்டு நாட்டின் முதல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை தொடங்கியது.
மருத்துவக் கருவிகள் மற்றும் செயலிகளை வடிவமைக்கும் மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் வகையில் நான்கு ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பு அங்கு வழங்கப்படுகிறது.
இதன் அடுத்தகட்டமாக, நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை உருவாக்கும் வகையில் எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி. படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து காமகோடி கூறுகையில், மருத்துவப் பட்டப்படிப்புகளை வழங்குவது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.
உயர்தர மருத்துவ உபகரணங்களுக்கு இந்தியா இன்னும் வெளிநாடுகளை சார்ந்திருப்பதாகவும், உள்நாட்டிலேயே மருத்துவக் கருவிகளை உருவாக்க மருத்துவர்களும் பொறியாளர்களும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரே நேரத்தில் ஆராய்ச்சியை முன்னெடுக்கும் சென்னை ஐ.ஐ.டி.யின் இந்த திட்டம் உயர்கல்வித் துறையில் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
